Wednesday, March 25, 2009

என்னுள் இருவர் ...


வணக்கம். நான் பரதன். உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. வளர்ந்த சூழ்நிலையும் கூட்டம் இல்லை. சிறு வயது தொட்டு இன்று வரை இருக்கும் எனது நண்பர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை. பிறந்ததிலிருந்து இன்று வரை என்றும் என் கூடவே இருக்கும் இரண்டு நண்பர்கள் ஒருவன் தனிமை மற்றொருவன் மனசாட்சி. சிறு வயதிலிருந்து நான் பல விஷயங்களை இழந்ததுண்டு, இதற்குக் காரணம் எனது எதிரியான தயக்கம் அல்லது தேவையில்லாத வெட்கம் என்றும் கூறலாம். பல பேரை பார்த்திருக்கிறேன், நிறைய நண்பர்களைக் கொண்டிருப்பார்கள். எனக்கு இருக்கும் நண்பர்களைப் பத்து விரலுக்குள் எண்ணி விடலாம். ஒருவரைக் கண்டோ அல்லது காணாமலோ பழகினால் தெரிந்தவர் என்கிறோம், இன்னும் நெருக்கமாகினால் நண்பர்கள் என்கிறோம். எனக்கும் அனுபவம் உண்டு, பள்ளிப் பருவங்களிலும், கல்லூரிப் பருவங்களிலும் வேலையிடத்திலும்; காரணம் சூழ்நிலை. ஆனால் நமக்குப் பிடித்தவர்களை மட்டும்தான் தேர்வு செய்கிறோம். எனது பிரச்சனை ஆரம்ப அறிமுகம் தான். யாராவது பேசினால்தான் பேசுவேன். யாரவது கேட்டாதான் சொல்லுவேன். நண்பர்களைத் திரட்டிக்கொள்வோம், அறிமுகப்படுத்திக்கொள்வோம் என்ற ஏக்கம் இருக்கும், மற்றவர்களுடன் பேச வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் அத்தயக்கம்தான் என்னை தடுக்கும். தெரியாதவர்கள் யாராவது என்னிடம் இருக்கும் பொருட்களை இரவல் கேட்டால், அவர்களிடம் இருந்துத் திரும்பிக் கேட்கத் தயங்குவேன். ஆசிரியர்களிடம் புரியாத பாடம் கேட்க தயங்குவேன். இப்படி ஏராளம் உள்ளன. இந்த விஷயங்களை எல்லாம் எனது 'நண்பர்கள்' கவனித்துக் கொண்டுதான் இருப்பார்கள். சிந்திக்கும் பொழுது தனிமை என்னை சூழும், மனசாட்சி என்னிடம் பேசும். முழு விஷயங்களையும் அறிந்த அவர்களிடம் உண்மையை மட்டும் பேசுவேன் நான். எந்நேரமும் தனிமை என்னை சூழ்ந்தே இருக்கும், மனிதர்கள் என்னிடம் பேசும் வரை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்குள் இருக்கும் பலத் திறமைகளை வெளியேக் கொண்டுவந்தவர்கள் இவர்கள். பள்ளிப்பருவ மாணவர்கள் இன்னமும் தொடர்பில் இருக்கிறார்கள்; அன்றாடம் பேசுவதுண்டு. ஆனால் எனக்கு ஏற்பட்ட எந்த கஷ்டத்தையும், கவலையையும் அவர்களிடம் கூறியதில்லை. பரதன் என்றால் எந்நேரமும் சந்தோஷமும் புன்னகையும் கொண்டிருப்பவன் என்றுதான் இன்று வரை நினைத்திருக்கிறார்கள். கவலை இருந்தால் யாரிடமாவது கூறி விடுங்கள், மனதிற்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று சொல்வதுண்டு. செய்திருக்கிறேன் எனக்குள் நானே, எனது மனசாட்சியிடம். ஆருதலாகிவிடும். எனது கவலையை மற்றவர்கள் சுமப்பது எனக்குப் பிடிக்காது. இட்சமயங்களில் மௌனம் சாதித்துத் தனிமைப் படுத்திக் கொள்வேன். அவ்வேளையில், சொந்தமாக பைத்தியக்காரனைப் போல் புலம்பி அழுததுண்டு. இதனை அறியா என் நண்பர்கள் திட்ட, சிரித்து வருத்தப்பட்டதும் உண்டு. என்னை பொருத்த வரை நான் நல்லவன் ஏனென்றால் என் மனசாட்சி சாகும் அளவிற்கு நான் எந்த காரியமும் செய்ததில்லை. எக்காரியத்தை செய்யும் முன், உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள், உண்மையே பேசும் உங்களது மனசாட்சியால் மட்டுமே தெளிவான கருத்தைத் தர முடியும். இதனால் இப்பொழுது எனது வாழ்கையில் நிறைய மாற்றங்கள் உண்டு. என் மனசாட்சியின் வேண்டுகோளுக்கிணங்க நான் என் எதிரிகளை வீழ்த்தி வெளியே வந்து சில விஷயங்களை சாதித்திருக்கிறேன். ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி. ஆள் வளர்ந்து அறிவு அவனை விட வளர்ந்தாலும் வளர்ச்சி தானே. ஆனால் சில மனிதர்கள் வளர்ந்த அளவிற்கு அறிவு வளரவில்லையே. இதனால் அவர்களின் வாழ்க்கையையும் நாசப்படுத்தி விட்டு நமது பெயரையும் அசிங்கப்படுத்துகிறார்கள் ( பல பேருக்குப் பொருந்தும் ) . உன்னுள் அழகாக வாழ்ந்து பார். சின்ன விஷயத்தைக் கூட ரசித்துப் பழகு. இயற்கையாகவே உன்னைச் சுற்றி அனைத்தும் அழகாக இருக்கும். நீ தெளிவாக இருக்கிறாயா? செய்வதைத் திருந்தச் செய்கிறாயா? யோசித்துச் செயல் படுகிறாயா? தவறு செய்வது இயல்பு; எந்நேரமும் செய்வது மகா தவறு!!! உன்னுடன் கடைசி வரை இருப்பது உனது அன்பிற்குரிய மனசாட்சியும் தனிமையும் மட்டுமே... அதனை உணர்த்து பார், ரசித்துப் பார், பொடியன் அறிவுரை கூறுகிறான் என்று என்ன வேண்டாம்.. யாவரும் முட்டாள் இல்லை. இத்தனை சிலர் துவங்கி விட்டார்கள்...நானும் துவங்கி விட்டேன்... எதிர்கால வெள்ளைப் பூக்களுக்காக நீங்கள் துவங்குவது எப்போது?




-பரதன்-